13 Jul 2008

கண்ணீர் விட்டோ வளர்த்தோம்

அலுவலகத்தில் ஒரு நாள் என் நண்பன் என்னிடம் பாலாஜீ, "இன்று நயன்தாராவும், சிம்புவும் சந்திச்சுப் பேசினாங்களாம்" என்றான் . நான் மறுமொழி பேசுவதற்குள் அவர்களின் உறவின் நிலைபாடு, அவர்கள் எங்கே சந்தித்தாகள், என்று எல்லாவற்றையும் விவரமாக விளக்கிக் கொண்டிருந்தான்.

நான் அவனை இடைமறித்து " டேய், மானெக்ஷா போன வாரம் இறந்துட்டார். அவரின் இறுதி மரியாதைக்கு எந்த மந்திரியும் போகல டா " என்றேன். " அவன் என்னிடம் மானெக்ஷா யாரு டா " என்றான். எனக்கு ஆச்சர்யம்!!!! . அதை மறைத்துக் கொண்டு நான் அவனிடம்,

" உடல் மண்ணுக்கு " என்ற வார்தைக்கு உதாரணமாக வாழ்ந்த மனிதன். இரண்டாம் உலகப்போரில் எதிரியின் குண்டு அவரின் மீது பாய்ந்த போதும், போராடிய வீரர். பாகிஸ்தானை எதிர்த்து, இந்திய படைகளை வழி நடத்தி, வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கித் தந்தவர். யாரோ செய்த வேலைக்கு தங்கள் பெயரை கல்வெட்டில் வைத்துக் கொள்ளும், இந்த கால அரசியல் வாதிகளை போல் இல்லாமல், பாகிஸ்தான் படைகள் சரண் அடைந்தவுடன், அப்போதைய பிரதமர் சொல்லியும். தான் போகாமல் தன் கிழக்கு பிராந்திய தளபதியை அனுப்பி அதை தலைமைதாங்க வைத்தவர். இப்படிப்பட்டவர் தன் கடைசி காலத்தை தமிழகத்தில் கழித்து, இங்கேயே தன் இன்னுயிரை நீத்தார் என்பது நமக்குப் பெருமை.
ஆனால் இந்த மாவிரருக்கு நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என்று நம் நாட்டின் ஜனாதிபதி, முப்படைத் தளபதிகள் என்த் துவங்கி பிரதமர், ராணுவ அமைச்சர் என யாருக்கும் எண்ணம் இல்லை என்பது கொடுமை.

ஆதரவு கொடுகிறார்களா இல்லையா என தெரியாமல் இருக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஒன்றும் இல்லாத விஷயங்களுக்காக சந்தித்துப் பேசும் நம் தலைவர்கள் ஏனோ மானெக்ஷாவை மறந்து விட்டார்கள் போலும்.

நாம் பிறப்பதற்க்கு முன்பாக ஒய்வு பெற்றுவிட்ட மானெக்ஷாவை பற்றி தெரியாமல் இருப்பது நியாயம். ஆனால் அதே சமயம் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை பற்றி நமக்கு தெரிந்து இருக்கிறது. அதன் இருபத்தைந்தாம் ஆண்டு விழாவை கொண்டாட உணவுத்துறை அமைச்சர் ( விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சோகத்தை தணிப்பதற்காக ) லண்டன் செல்கிறார்.

நினைத்துப் பார்த்தால் பாரதிக்கு, வ.உ.சி க்கு, சுப்பிரமணிய சிவா விற்கு இறுதி மரியாதை செலுத்த தெரியாதவர்களான நமக்கு மானெக்ஷா எம்மாத்திறம். இந்த செயலுக்காக இந்த தேசம் அவள் மைந்தர்களை பார்த்து கண்ணீர் விட்டது .


*** பிழைகளை திருத்துவோம்